Wednesday, March 27, 2013

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மாயாகுளம் செய்திகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் தேர்வு அட்டவணையையும் தேர்வின் நேரத்தையும் இணைகிறேன்.

Time Table For exams

March 27, 2013 – Wednesday – Language I (Tamil I)
March 28, 2013 – Thursday    - Language II (Tamil Paper II)
April 1, 2013      - Monday      - English  I
April 2, 2013      - Tuesday      - English – II
April 5, 2013     – Friday          - Maths
April 8, 2013     – Monday       – Science
April 12, 2013   – Friday          - Social Science


Timings for all exams have a pattern as below:
10am       -10.10 am       – Reading Question Paper
10.10 am  - 10.15 am      - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm     – Exam duration (2.5 hours)

Tuesday, March 26, 2013

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.

உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tuesday, March 12, 2013

ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்கம்


ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முருகன், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி, உப்பு வேதியியல் துறை இயக்குநர் போஸ், முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

முன்னதாக, ஏர்வாடி தர்கா ஹக்தார் சபைத் தலைவர் அம்ஜத் ஹுசைன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை சற்று அதிகமாகவே உள்ளது. இக் குறையைப் போக்குவதற்காக மத்திய அரசின் சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக சில இடங்களில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஏர்வாடியில் தொடக்கப்பட்டுள்ளது.

         


முள்ளிமுனை, காரங்காடு ஆகிய இடங்களிலும், நரிப்பையூரிலும் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சூரிய ஒளி மூலமாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ள திட்டங்கள் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தம் 78 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இங்கு தற்போது 1 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குருநாதன், ஏர்வாடி ஊராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், ஒன்றியக் கவுன்சிலர்கள் காதர் பாட்சா, செüந்திரபாண்டி, மன்ற உறுப்பினர்கள் சைனாபேகம், அம்ஜத்உசேன், பத்ரிஸ்கான், ராசு, குமார், சித்ரத்பானு, தில்லைராணி, சுல்தான் செய்யது இபுராகிம், ஷாஜஹான், மாரியம்மாள், செல்வராஜ், சசிகலா, குமார், சுதாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.

Friday, March 1, 2013

மாயாகுளம் அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு!

மாயாகுளம்  அருகே பார‌தி ந‌க‌ர் பகுதியில் அபூர்வமான பாம்பு தின்னி கழுகு ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டது.

கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.

அப்ப‌ற‌வை பாம்பு தின்னி க‌ழுகு என‌ உறுதி செய்து கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு எடுத்து சென்ற‌ன‌ர்.கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் ப‌ரிசோத‌னை செய்த‌தில் க‌ழிச்ச‌ல் நோய் தாக்கியுள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து.ம‌ருத்துவ‌ர்க‌ள் சிகிச்சை அளித்த‌ன‌ர்.

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறியதாவ‌து,விஷ‌ப்பூச்சிக‌ளையே உண‌வாக‌ சாப்பிடும்  இக்க‌ழுகு இப்ப‌குதியில் அரிதாகும் .இப்ப‌குதியை க‌ட‌ந்து போகும் போது க‌ழிச‌ல் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தால் ம‌ய‌ங்கி கீழே விழுந்துள்ள‌து.மேலும் இது குஞ்சு க‌ழுகு இது ஒரு அடிக்கு மேல் வ‌ள‌ரும்.என்றார்.

Friday, February 8, 2013

கீழக்கரை - கடையில் திருட்டு

கீழக்கரையில் எல்.ஐ.சி. முகவர் கடையில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை மேலத்தெரு 500 பிளேட் பகுதியைச் சேர்ந்த சேக்முகைதீன் மகன் ராஜாகனி(57). எல்ஐசி முகவராக உள்ளார். இவரது கடை சின்னக்கடைதெரு பகுதியில் உள்ளது.

வியாழக்கிழமை இரவில், இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரொக்கம் ரூ.20ஆயிரம் மற்றும் 5செல்போன்கள் திருடப்பட்டிருந்ததாம்.

வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்த ராஜாகனி கடையில் பணம், செல்போன்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் மோப்பநாயுடன் வந்து சோதனை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, February 7, 2013

வங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி என்.ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 9486360716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம்: ராமநாதபுரம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் விஸ்வரூபம் திரையிட இருந்த திரையரங்கிலும், அருகில் இருந்த மற்றொரு திரையரங்கிலும் முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்து சேதமாயின.
 ராமநாதபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே தி சினிமா என்ற திரையரங்கில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளின்படி விஸ்வருபம் படத்தை வெளியிடுவோம் என முடிவு செய்திருந்ததால், படம் வெளியாவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதற்குப் பதிலாக வேறு திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், திரையரங்கில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சுமார் 15 பேர் கொண்ட கும்பல், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு திரையரங்கின் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார்களாம். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்தன.

இதற்கு அருகில் இருந்த ஜெகன் திரையரங்கின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அந்த குண்டு திரையங்கின் உள்ளே முன்புற வளாகத்தில் விழுந்துள்ளது. வீசப்பட்ட பாட்டில்கள் உடைந்து, பல இடங்களில் சிதறிக் கிடந்தன. பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த கேணிக்கரை காவல் நிலையக் காவலர் சந்திரன் என்பவரையும் கீழே தள்ளிவிட்டு குண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஜெ. தினேஷ்பாபு மற்றும் ஜெ.சுகுமார் ஆகிய இருவரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் கூறியதாவது: போலீஸ் பாதுகாப்பையும் மீறி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்து கற்கள், சோடா பாட்டில்களை வீசியுள்ளனர். இதில் திரையரங்கத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

பாட்டிலுக்குள் பெட்ரோல் இருந்ததா அல்லது மண்ணெண்ணெய் இருந்ததா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். காவலர் சந்திரன் என்பவரையும் வந்த கும்பல் தள்ளி விட்டுள்ளது. கற்கள், சோடா பாட்டில்கள் வீசியது மற்றும் பெட்ரோல் குண்டு வீசியது, காவலரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
google-site-verification: googlee59dddba6405f270.html