ராமநாதபுரம் தாலுகாவில் இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னேற்ற திட்டங்களில் ஒன்றான இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ராமநாதபுரம் தாலுகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இத்திட்டம் செயல்பட தொடங்கும். இதில் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதரவற்றோர், முதல் பட்டதாரி ஆகிய சான்றுகள் மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது போன்ற சான்றுகள் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டியதில்லை. தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு மையத்தில் மனு செய்து கொள்ளலாம். தங்களுக்கு தேவைப் படும் சான்று அந்த மையத்திலேயே ஓரிரு நாள் கழித்து வழங்கப்படும். இதற்காக ரூ.30 கட்டணமாக வசூலிக் கப்படும்.
இதன்படி பெரியபட்டினம், பட்டணம்காத்தான், பனைக்குளம், புதுமடம், என்மனங்கொண்டான், வேதாளை, தேவிபட்டினம், அச்சுந்தன் வயல், சூரங்கோட்டை, பேராவூர் திருஉத்தரகோசமங்கை ஆகிய ஊராட்சி அலுவலகங்களிலும், கீழக்கரை, ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, காட்டூரணி, ரெட்டையூரணி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய நகராட்சி அலுவலகத்திலும், மண்டபம் பேரூராட்சி அலுவலகத்திலும் மின் ஆளுமை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் நந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.