ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முருகன், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி, உப்பு வேதியியல் துறை இயக்குநர் போஸ், முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
முன்னதாக, ஏர்வாடி தர்கா ஹக்தார் சபைத் தலைவர் அம்ஜத் ஹுசைன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை சற்று அதிகமாகவே உள்ளது. இக் குறையைப் போக்குவதற்காக மத்திய அரசின் சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக சில இடங்களில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஏர்வாடியில் தொடக்கப்பட்டுள்ளது.
முள்ளிமுனை, காரங்காடு ஆகிய இடங்களிலும், நரிப்பையூரிலும் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சூரிய ஒளி மூலமாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்று மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ள திட்டங்கள் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தம் 78 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இங்கு தற்போது 1 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குருநாதன், ஏர்வாடி ஊராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், ஒன்றியக் கவுன்சிலர்கள் காதர் பாட்சா, செüந்திரபாண்டி, மன்ற உறுப்பினர்கள் சைனாபேகம், அம்ஜத்உசேன், பத்ரிஸ்கான், ராசு, குமார், சித்ரத்பானு, தில்லைராணி, சுல்தான் செய்யது இபுராகிம், ஷாஜஹான், மாரியம்மாள், செல்வராஜ், சசிகலா, குமார், சுதாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.