Showing posts with label Mayakulam. Show all posts
Showing posts with label Mayakulam. Show all posts

Friday, February 7, 2014

இணைய தளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் தாலுகாவில் இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.

சான்றுகள்
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னேற்ற திட்டங்களில் ஒன்றான இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ராமநாதபுரம் தாலுகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இத்திட்டம் செயல்பட தொடங்கும். இதில் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதரவற்றோர், முதல் பட்டதாரி ஆகிய சான்றுகள் மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது போன்ற சான்றுகள் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டியதில்லை. தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு மையத்தில் மனு செய்து கொள்ளலாம். தங்களுக்கு தேவைப் படும் சான்று அந்த மையத்திலேயே ஓரிரு நாள் கழித்து வழங்கப்படும். இதற்காக ரூ.30 கட்டணமாக வசூலிக் கப்படும்.

மின் ஆளுமை மையங்கள்
 
இதன்படி பெரியபட்டினம், பட்டணம்காத்தான், பனைக்குளம், புதுமடம், என்மனங்கொண்டான், வேதாளை, தேவிபட்டினம், அச்சுந்தன் வயல், சூரங்கோட்டை, பேராவூர் திருஉத்தரகோசமங்கை ஆகிய ஊராட்சி அலுவலகங்களிலும், கீழக்கரை, ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, காட்டூரணி, ரெட்டையூரணி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய நகராட்சி அலுவலகத்திலும், மண்டபம் பேரூராட்சி அலுவலகத்திலும் மின் ஆளுமை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் நந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sunday, January 5, 2014

கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு

மாயாகுளம் அருகே உள்ள புதுமாயாகுளத்தை சேர்ந்தவர் ராமராஜ் என்பவரது மகன் பூமிநாதன்(வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணை தொகை செலுத்துவதற்காக ராமநாதபுரம் வந்தார்.



பயோனியர் சோதனை சாவடி பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் சிலர் பூமிநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பூமிநாதன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Thursday, January 2, 2014

ராமநாதபுரத்தில் ஜன.4இல் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.


இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 16, 2013

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 30.9.2013 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினரில் பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி  பெற்றோர் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்த பதிவுதாரர்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு செய்திருப்பின் உதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பதிவு செய்து ஓராண்டு பெற்றிருந்தாலே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், வயது 45 முடிவு பெறாமலும் இருக்க வேண்டும்.

இத்தகுதிகளை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி நேரில் வந்து உரிய விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், சமையலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அலுவலக உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அலுவலக உதவியாளர் பணி: (பதிவு மூப்பு தேதி அடைப்புக் குறிக்குள்) மாவட்டக் கருவூல அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2013ன் படி  தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வயது 18-35 வரை. பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 19-32 வரை.  பொதுப்போட்டியாளர் வயது 18-30 வரை. அரது விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.

உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்களாக இருந்து முன்னுரிமையுள்ளவர்களாக இருந்தால் பிற்பட்ட வகுப்பினர்களில் ஆதரவற்ற விதவை(10.5.2011), முன்னுரிமையற்றவர்களாக இருந்து பொதுப்போட்டியாளர்(15.7.1981), மாற்றுத்திறனாளிகள் (9.4.1985) இத்தகுதிகளை உடையோர் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இம்மாதம் 17 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விபரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை: ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர். எழுதப்படிக்கத் தெரிந்து அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2013 அன்று பிற்பட்ட வகுப்பினர் வயது 18-32 வரை இருக்க வேண்டும்,அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்கள் மட்டும் முன்னுரிமையுள்ளவர்களாக இருக்கும் (மாற்றுத்திறனாளிகள் தவிர) அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

இத்தகுதிகளையுடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இம்மாதம் 16 ஆம் தேதி அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பரிந்துரை விபரத்தினை அறிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர்.



கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். மோகன் தாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Source from keelakaraitimes.com

Monday, November 25, 2013

டிச.31க்குள் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டுகோள்

சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை விவரத்தை குடும்ப அட்டையில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பெற தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்களுக்காக விநியோகம் முறைப்படுத்தப்படவுள்ளது.


எனவே மண்ணெண்ணைய் வழங்கு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டரின் எண்ணிக்கை விவரத்தை புதிதாக முத்திரையிட்டு காண்பித்தவர்களுக்கே நியாய விலைக்கடைகளில் மாதாந்திர மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

மேலும் சமையல் எரிவாயு ஏஜென்சியினரும் அவர்களது பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எரிவாயு சிலிண்டர் விவரத்தினை பதிவு செய்ய வரும் சமயத்தில் குடும்ப அட்டைகளில் வழங்கப்பட்ட சிலிண்டரின் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்து கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையில் எரிவாயு இணைப்பு எண்ணிக்கையை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதி முதல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 23, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பதிவு விவரம் சரிபார்த்தல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது பதிவு விவரங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை (நவ.23) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு விபரம் சரிபார்க்கும் பொருட்டு அனைத்து சான்றுகளுடனும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சிவகாமசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராமநாதபுரத்தில் (2012) நடைù பற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படவுள்ளது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Friday, November 22, 2013

மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானம்

மதுரையிலிருந்து துபாய்க்கு, வழியில் நிறுத்தம் ஏதும் இல்லாத நேரடி விமானப் போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இன்று முதல் துவக்குகிறது.



மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளம்பும் விமானம் நான்கரை மணி நேரத்தில் துபாய் சென்றடையும். துபாயிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு கிளம்பி காலை 9.45 க்கு இந்தியா வந்தடையும்.

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருந்து துபாயில் பணி புரிபவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக அமையும்.

Friday, November 15, 2013

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.



தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர்.

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!! இந்நிலையில் இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை நவம்பர் 16 சனிக்கிழமை முதல்தமிழகத்தில் அமலுக்கு வருகிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

Friday, October 11, 2013

ஒருவரிடம் இரு அடையாள அட்டை இருந்தால் கடும் நடவடிக்கை

ஒரு நபரிடம் இரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது .அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜி.முனியசாமி (அதிமுக மாவட்ட செயலாளர்), அகமது தம்பி (திமுக மாவட்ட துணை செயலாளர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்), ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(காங்கிரஸ்), திலீப்குமார்(தேமுதிக), அன்பு பகுருதீன்(தேசியவாத காங்கிரஸ்) உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் பேசியது: வரும் 1.1.2014 அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9.82லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்.4,94,300.பெண் வாக்காளர்கள் 4,87,645. இவர்களைத் தவிர இதர வாக்காளர்களாக 55 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும்,சேர்க்கவும்,திருத்தம் செய்யும் பணி 1.10.2013முதல் 31.10.2013வரை நடைபெறவுள்ளது. 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இது தவிர ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து இறந்தவர்கள்,வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பெயர்களை நீக்கம் செய்தும் கொள்ளலாம். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பிரதிகளாகவும், குறுந்தகடுகளாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு அந்தந்த அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் சேர்க்க- நீக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம்.

எந்த ஒரு நபரிடமும் இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு மையங்களில் அதிகப்படியான அளவுக்கு பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இம்மாதம் 20,27 ஆகிய நாட்களில் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று வாக்காளர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 701 இடங்களில் 1225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 1050 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண் வாக்குச்சாவடிகளாக மாற்ற வேண்டிய பகுதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Friday, October 4, 2013

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநருக்கு பதிவு மூப்பு பரிந்துரை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கேட்டுக்கொண்டபடி தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடத்திற்கு பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படவுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ.யில்(கணினி ஆப்பரேட்டர் புரோகிரோமிங் அஸிஸ்டென்ட்) சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.1.7.2013 அன்று அனைத்து வகுப்பினருக்கும் வயது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளராக இருந்து முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கபடவும் உள்ளனர். இத்தகுதிகளை உடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 7 ஆம் தேதி வருகை புரிந்து பரிந்துரைக்கப்பட்ட விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 1, 2013

கிழக்கு கடற்கரை ரோடு 4 வழியாக மாற்ற ஆய்வு

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக தூத்துக்குடி செல்லும், கிழக்கு கடற்கரை ரோடு(இ.சி.ஆர்.), நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.
 
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையில் இருந்து, தூத்துக்குடிக்கு, தற்போது இருவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து புதுச்சேரி தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில், "டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் "லெவல் டிராயிங்' பணி மேற்கொண்டுள்ளனர்.
 
இது குறித்து திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ""ராமநாதபுரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 120 கி.மீ., தூர ஆய்வு பணிக்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் சர்வே முடிந்து, ஆய்வு அறிக்கையை ஒப்படைத்து விடுவோம். அடுத்த கட்ட பணி குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை மேற்கொள்வர்,''என்றார்.

Thursday, May 30, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்...

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.



இணைய தளங்கள்...

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
 www.dge3.tn.nic.in

இலவசமாக... 

பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

Thursday, May 23, 2013

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.

தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.

தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.

Sunday, April 21, 2013

ராமநாதபுரத்தில் ஏப்.28 இலவச இதய அறுவைச் சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.28 ஆம்  தேதி இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த ரோட்டரி சங்கம்  ஏற்பாடு செய்து வருவதாக அச்சங்கத்தின் துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது:
ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை  ஆகியவை இணைந்து செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த உள்ளன.

ரோட்டரி சங்க ஆளுநர் ஹெச். ஷாஜகான் முயற்சியில் நடைபெறும் இம்முகாமில்  16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இதில் இதய நோய் சம்பந்தப்பட்டவை கண்டறிந்து தேவைப்பட்டால் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வசதியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலும்  இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

ஏழைக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, செல்பேசி எண்: 98424-21334 அல்லது ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ. ரமேஷ் பாபு, செல்பேசி: 94425-21964 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

Friday, April 12, 2013

முகம்மது சதக் கல்லூரியில் ரத்த தான முகாம்

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்,  அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சிமிஷன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகள்  இணைந்து ரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.


முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயக்குநர்  ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவபாலன்  வரவேற்றார். இதில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில்,  குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.

முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ரத்த தானம் செய்தனர்.
 திட்ட அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார். பேராசிரியர்கள்  கார்த்திகேயன், முகம்மதுரபி, ஷேக் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wednesday, March 27, 2013

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மாயாகுளம் செய்திகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் தேர்வு அட்டவணையையும் தேர்வின் நேரத்தையும் இணைகிறேன்.

Time Table For exams

March 27, 2013 – Wednesday – Language I (Tamil I)
March 28, 2013 – Thursday    - Language II (Tamil Paper II)
April 1, 2013      - Monday      - English  I
April 2, 2013      - Tuesday      - English – II
April 5, 2013     – Friday          - Maths
April 8, 2013     – Monday       – Science
April 12, 2013   – Friday          - Social Science


Timings for all exams have a pattern as below:
10am       -10.10 am       – Reading Question Paper
10.10 am  - 10.15 am      - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm     – Exam duration (2.5 hours)

Tuesday, March 26, 2013

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.

உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tuesday, March 12, 2013

ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்கம்


ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முருகன், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி, உப்பு வேதியியல் துறை இயக்குநர் போஸ், முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

முன்னதாக, ஏர்வாடி தர்கா ஹக்தார் சபைத் தலைவர் அம்ஜத் ஹுசைன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை சற்று அதிகமாகவே உள்ளது. இக் குறையைப் போக்குவதற்காக மத்திய அரசின் சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக சில இடங்களில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஏர்வாடியில் தொடக்கப்பட்டுள்ளது.

         


முள்ளிமுனை, காரங்காடு ஆகிய இடங்களிலும், நரிப்பையூரிலும் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சூரிய ஒளி மூலமாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ள திட்டங்கள் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தம் 78 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இங்கு தற்போது 1 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குருநாதன், ஏர்வாடி ஊராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், ஒன்றியக் கவுன்சிலர்கள் காதர் பாட்சா, செüந்திரபாண்டி, மன்ற உறுப்பினர்கள் சைனாபேகம், அம்ஜத்உசேன், பத்ரிஸ்கான், ராசு, குமார், சித்ரத்பானு, தில்லைராணி, சுல்தான் செய்யது இபுராகிம், ஷாஜஹான், மாரியம்மாள், செல்வராஜ், சசிகலா, குமார், சுதாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.
google-site-verification: googlee59dddba6405f270.html