Friday, March 1, 2013

மாயாகுளம் அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு!

மாயாகுளம்  அருகே பார‌தி ந‌க‌ர் பகுதியில் அபூர்வமான பாம்பு தின்னி கழுகு ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டது.

கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.

அப்ப‌ற‌வை பாம்பு தின்னி க‌ழுகு என‌ உறுதி செய்து கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு எடுத்து சென்ற‌ன‌ர்.கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் ப‌ரிசோத‌னை செய்த‌தில் க‌ழிச்ச‌ல் நோய் தாக்கியுள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து.ம‌ருத்துவ‌ர்க‌ள் சிகிச்சை அளித்த‌ன‌ர்.

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறியதாவ‌து,விஷ‌ப்பூச்சிக‌ளையே உண‌வாக‌ சாப்பிடும்  இக்க‌ழுகு இப்ப‌குதியில் அரிதாகும் .இப்ப‌குதியை க‌ட‌ந்து போகும் போது க‌ழிச‌ல் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தால் ம‌ய‌ங்கி கீழே விழுந்துள்ள‌து.மேலும் இது குஞ்சு க‌ழுகு இது ஒரு அடிக்கு மேல் வ‌ள‌ரும்.என்றார்.

Friday, February 8, 2013

கீழக்கரை - கடையில் திருட்டு

கீழக்கரையில் எல்.ஐ.சி. முகவர் கடையில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை மேலத்தெரு 500 பிளேட் பகுதியைச் சேர்ந்த சேக்முகைதீன் மகன் ராஜாகனி(57). எல்ஐசி முகவராக உள்ளார். இவரது கடை சின்னக்கடைதெரு பகுதியில் உள்ளது.

வியாழக்கிழமை இரவில், இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரொக்கம் ரூ.20ஆயிரம் மற்றும் 5செல்போன்கள் திருடப்பட்டிருந்ததாம்.

வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்த ராஜாகனி கடையில் பணம், செல்போன்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் மோப்பநாயுடன் வந்து சோதனை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, February 7, 2013

வங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி என்.ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 9486360716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம்: ராமநாதபுரம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் விஸ்வரூபம் திரையிட இருந்த திரையரங்கிலும், அருகில் இருந்த மற்றொரு திரையரங்கிலும் முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்து சேதமாயின.
 ராமநாதபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே தி சினிமா என்ற திரையரங்கில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளின்படி விஸ்வருபம் படத்தை வெளியிடுவோம் என முடிவு செய்திருந்ததால், படம் வெளியாவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதற்குப் பதிலாக வேறு திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், திரையரங்கில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சுமார் 15 பேர் கொண்ட கும்பல், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு திரையரங்கின் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார்களாம். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்தன.

இதற்கு அருகில் இருந்த ஜெகன் திரையரங்கின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அந்த குண்டு திரையங்கின் உள்ளே முன்புற வளாகத்தில் விழுந்துள்ளது. வீசப்பட்ட பாட்டில்கள் உடைந்து, பல இடங்களில் சிதறிக் கிடந்தன. பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த கேணிக்கரை காவல் நிலையக் காவலர் சந்திரன் என்பவரையும் கீழே தள்ளிவிட்டு குண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஜெ. தினேஷ்பாபு மற்றும் ஜெ.சுகுமார் ஆகிய இருவரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் கூறியதாவது: போலீஸ் பாதுகாப்பையும் மீறி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்து கற்கள், சோடா பாட்டில்களை வீசியுள்ளனர். இதில் திரையரங்கத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

பாட்டிலுக்குள் பெட்ரோல் இருந்ததா அல்லது மண்ணெண்ணெய் இருந்ததா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். காவலர் சந்திரன் என்பவரையும் வந்த கும்பல் தள்ளி விட்டுள்ளது. கற்கள், சோடா பாட்டில்கள் வீசியது மற்றும் பெட்ரோல் குண்டு வீசியது, காவலரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரைத் தேடித் தர வேண்டும்.

  அரசு பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் 500-க்கு 475-க்கும் அதிகமான மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1200-க்கு 1175 மதிப்பெண்களும் பெறும்  மாணவ, மாணவியருக்கு சுதந்திர தின நன்னாளில் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் அறுவடையாகக்கூடிய  நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  ராமநாதபுரம் வட்டாரத்தில் மாதவனூர், புல்லங்குடி, தொருவளூர், காட்டூரணி, வெண்ணாத்தூர். திருப்புல்லாணி வட்டாரத்தில் மல்லல், வைகை, பரமக்குடி  வட்டாரத்தில் வெங்கிட்டான்குறிச்சி, பார்த்திபனூர். முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீரனூர், முதுகுளத்தூர், நல்லூர், செல்வநாயகபுரம், திருவரங்கம், காக்கூர், செம்பொன்குடி, தேரிருவேலி, விளங்களத்தூர்.

  கமுதி வட்டாரத்தில் முஷ்டக்குறிச்சி, என்.கரிசல்குளம், கீழராமநதி, புத்துருத்தி, பெருநாழி, மண்டலமாணிக்கம், டி.புனவாசல், பேரையூர், பம்மனேந்தல், கோவிலாங்குளம், காவடிப்பட்டி, கமுதி, ஏ.தரைக்குடி, பாக்குவெட்டி, கே.வேம்பக்குளம், ஆணையூர், ராமசாமிப்பட்டி, நகரத்தார் குறிச்சி, கே.பாப்பாகுளம். கடலாடி வட்டாரத்தில் ஓரிவயல், டி.எம்.கோட்டை, ஏ.புனவாசல், கடலாடி, ஆப்பனூர், சாயல்குடி, மேலச்செல்வனூர், சிக்கல், மேலக்கிடாரம்.

  போகலூர் வட்டாரத்தில் எஸ்.கொடிக்குளம், சமேனூர். நயினார்கோயில் வட்டாரத்தில் வல்லம், மேமங்கலம், வாதவனேரி உள்ளிட்ட 51 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  விவசாயிகள் தங்கள் விளை நெல்லைக் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து உரிய லாபம் பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
google-site-verification: googlee59dddba6405f270.html