Friday, February 7, 2014

இணைய தளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் தாலுகாவில் இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.

சான்றுகள்
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னேற்ற திட்டங்களில் ஒன்றான இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ராமநாதபுரம் தாலுகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இத்திட்டம் செயல்பட தொடங்கும். இதில் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதரவற்றோர், முதல் பட்டதாரி ஆகிய சான்றுகள் மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது போன்ற சான்றுகள் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டியதில்லை. தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு மையத்தில் மனு செய்து கொள்ளலாம். தங்களுக்கு தேவைப் படும் சான்று அந்த மையத்திலேயே ஓரிரு நாள் கழித்து வழங்கப்படும். இதற்காக ரூ.30 கட்டணமாக வசூலிக் கப்படும்.

மின் ஆளுமை மையங்கள்
 
இதன்படி பெரியபட்டினம், பட்டணம்காத்தான், பனைக்குளம், புதுமடம், என்மனங்கொண்டான், வேதாளை, தேவிபட்டினம், அச்சுந்தன் வயல், சூரங்கோட்டை, பேராவூர் திருஉத்தரகோசமங்கை ஆகிய ஊராட்சி அலுவலகங்களிலும், கீழக்கரை, ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, காட்டூரணி, ரெட்டையூரணி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய நகராட்சி அலுவலகத்திலும், மண்டபம் பேரூராட்சி அலுவலகத்திலும் மின் ஆளுமை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் நந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sunday, January 5, 2014

கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு

மாயாகுளம் அருகே உள்ள புதுமாயாகுளத்தை சேர்ந்தவர் ராமராஜ் என்பவரது மகன் பூமிநாதன்(வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணை தொகை செலுத்துவதற்காக ராமநாதபுரம் வந்தார்.



பயோனியர் சோதனை சாவடி பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் சிலர் பூமிநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பூமிநாதன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Thursday, January 2, 2014

ராமநாதபுரத்தில் ஜன.4இல் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.


இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
google-site-verification: googlee59dddba6405f270.html