சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை விவரத்தை குடும்ப அட்டையில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பெற தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்களுக்காக விநியோகம் முறைப்படுத்தப்படவுள்ளது.
எனவே மண்ணெண்ணைய் வழங்கு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டரின் எண்ணிக்கை விவரத்தை புதிதாக முத்திரையிட்டு காண்பித்தவர்களுக்கே நியாய விலைக்கடைகளில் மாதாந்திர மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
மேலும் சமையல் எரிவாயு ஏஜென்சியினரும் அவர்களது பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எரிவாயு சிலிண்டர் விவரத்தினை பதிவு செய்ய வரும் சமயத்தில் குடும்ப அட்டைகளில் வழங்கப்பட்ட சிலிண்டரின் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்து கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையில் எரிவாயு இணைப்பு எண்ணிக்கையை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதி முதல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.