Wednesday, January 30, 2013

விஸ்வரூபம்: ராமநாதபுரம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் விஸ்வரூபம் திரையிட இருந்த திரையரங்கிலும், அருகில் இருந்த மற்றொரு திரையரங்கிலும் முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்து சேதமாயின.
 ராமநாதபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே தி சினிமா என்ற திரையரங்கில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளின்படி விஸ்வருபம் படத்தை வெளியிடுவோம் என முடிவு செய்திருந்ததால், படம் வெளியாவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதற்குப் பதிலாக வேறு திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், திரையரங்கில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சுமார் 15 பேர் கொண்ட கும்பல், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு திரையரங்கின் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார்களாம். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்தன.

இதற்கு அருகில் இருந்த ஜெகன் திரையரங்கின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அந்த குண்டு திரையங்கின் உள்ளே முன்புற வளாகத்தில் விழுந்துள்ளது. வீசப்பட்ட பாட்டில்கள் உடைந்து, பல இடங்களில் சிதறிக் கிடந்தன. பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த கேணிக்கரை காவல் நிலையக் காவலர் சந்திரன் என்பவரையும் கீழே தள்ளிவிட்டு குண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஜெ. தினேஷ்பாபு மற்றும் ஜெ.சுகுமார் ஆகிய இருவரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் கூறியதாவது: போலீஸ் பாதுகாப்பையும் மீறி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்து கற்கள், சோடா பாட்டில்களை வீசியுள்ளனர். இதில் திரையரங்கத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

பாட்டிலுக்குள் பெட்ரோல் இருந்ததா அல்லது மண்ணெண்ணெய் இருந்ததா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். காவலர் சந்திரன் என்பவரையும் வந்த கும்பல் தள்ளி விட்டுள்ளது. கற்கள், சோடா பாட்டில்கள் வீசியது மற்றும் பெட்ரோல் குண்டு வீசியது, காவலரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரைத் தேடித் தர வேண்டும்.

  அரசு பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் 500-க்கு 475-க்கும் அதிகமான மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1200-க்கு 1175 மதிப்பெண்களும் பெறும்  மாணவ, மாணவியருக்கு சுதந்திர தின நன்னாளில் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் அறுவடையாகக்கூடிய  நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  ராமநாதபுரம் வட்டாரத்தில் மாதவனூர், புல்லங்குடி, தொருவளூர், காட்டூரணி, வெண்ணாத்தூர். திருப்புல்லாணி வட்டாரத்தில் மல்லல், வைகை, பரமக்குடி  வட்டாரத்தில் வெங்கிட்டான்குறிச்சி, பார்த்திபனூர். முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீரனூர், முதுகுளத்தூர், நல்லூர், செல்வநாயகபுரம், திருவரங்கம், காக்கூர், செம்பொன்குடி, தேரிருவேலி, விளங்களத்தூர்.

  கமுதி வட்டாரத்தில் முஷ்டக்குறிச்சி, என்.கரிசல்குளம், கீழராமநதி, புத்துருத்தி, பெருநாழி, மண்டலமாணிக்கம், டி.புனவாசல், பேரையூர், பம்மனேந்தல், கோவிலாங்குளம், காவடிப்பட்டி, கமுதி, ஏ.தரைக்குடி, பாக்குவெட்டி, கே.வேம்பக்குளம், ஆணையூர், ராமசாமிப்பட்டி, நகரத்தார் குறிச்சி, கே.பாப்பாகுளம். கடலாடி வட்டாரத்தில் ஓரிவயல், டி.எம்.கோட்டை, ஏ.புனவாசல், கடலாடி, ஆப்பனூர், சாயல்குடி, மேலச்செல்வனூர், சிக்கல், மேலக்கிடாரம்.

  போகலூர் வட்டாரத்தில் எஸ்.கொடிக்குளம், சமேனூர். நயினார்கோயில் வட்டாரத்தில் வல்லம், மேமங்கலம், வாதவனேரி உள்ளிட்ட 51 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  விவசாயிகள் தங்கள் விளை நெல்லைக் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து உரிய லாபம் பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 22, 2013

இராமநாதபுரம் ஜேம்ஸ் அன் கோ (வில்) வேலை வாய்ப்பு


இளம் விஞ்ஞானிகளை உருவாக்கப் பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மதுரை யாதவா கல்லூரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய  கடல் வள மீன் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இளம் விஞ்ஞானிகளை  உருவாக்கும் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி மண்டபம் கடல்வள மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.



யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் தலைமை வகித்தார். பயிற்சி முகாமை மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜி.கோபகுமார் துவக்கி வைத்துப் பேசினார்.

இதில் இன்டெல் ஆராய்ச்சி தொழில்நுட்ப சேவை அமைப்பின் பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஹன்னா முருகன், யாதவா கல்லூரியின் மற்றொரு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.யசோத்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் பேசியது:
மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களைத் தேர்வு செய்து அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான பயிற்சி ஜன.21 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறோம். பயிற்சி முகாமில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 75 பேர் பங்கேற்கின்றனர்.

இதில் நானோ சென்சார் மற்றும் ரோபாட், வானவியல் மற்றும் கணித ஆராய்ச்சிகள், ஜின் தொழில்நுட்பம், புற்று நோய், சூரிய சக்தி, உயிர் சக்தி, தண்ணீர் சேமிப்பு மற்றும் இயற்கைப் பாதிப்பு, மேஜிக் மூலம் அறிவியலை பரப்புதல், ஜீன் மாற்றமடைந்த தாவரம் ஆகியவை குறித்து அந்தந்தத் துறைகளில் தலை சிறந்த விஞ்ஞானிகள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் இளம் வயதிலேயே விஞ்ஞானிகளாக மாற்ற முடியும் என்பதற்கான பயிற்சியே இதுவாகும் என்றார்.

மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமைக் கலாம் இயக்கம், கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகளை  நடும் பணியை திங்கள்கிழமை துவக்கின.


  இதையொட்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. முகாம் அலுவலகம் அருகே பசுமைக் கலாம் இயக்கத்தின் நிறுவனரும், நடிகருமான விவேக் ஒரு மரக்கன்றினை நட்டார். அதற்கு கலாம் என்று பெயரிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:

  பசுமைக் கலாம் இயக்கம் சார்பில் இதுவரை 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 25 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பூர்த்தியடையும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை அழைத்து ஒரு மிகப்பெரிய விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம்.

  ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாகக் காட்சியளிக்கின்றன. மழை பெய்வதற்கு மிகவும் முக்கியம் மரங்களாகும். அதனால்  அப்துல் கலாமின் கனவான மரக்கன்றுகள் நடும் பணியை பசுமைக் கலாம் இயக்கம்  மூலம் செய்து வருகிறோம்.

  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் எழுச்சி தீபமாக இருந்து வரும் அப்துல்கலாமின் பெயரையை இன்று நட்டு வைத்த மரக்கன்றுக்கு சூட்டியுள்ளோம் என்றார்.

  இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசுகையில், இன்று ஒரே நாளில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மொத்தம் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம்.

 மேலும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும்  நடுவது உள்பட மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும்  நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

  விழாவில் டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமீது அப்துல்காதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகாம சுந்தரி, வட்டாட்சியர் க.அன்புநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜேக்கப் ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

  பின்னர் அப்துல் கலாம் படித்த சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மரக்கன்றுகளை விவேக் நட்டார்.

Monday, January 21, 2013

பிப்ரவரி 1 முதல் 18 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 18 வரை நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தேர்வுக்கான அட்டவணையை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான மாணவர்களின் பதிவு எண் பட்டியல் ஜனவரி 27-ஆம் தேதி வாக்கில் தயாராகும் எனத் தெரிகிறது.

சிறிய மாவட்டங்களில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்திலேயே நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும், பெரிய மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 18 வரை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வுக்குப் போதிய இடைவெளி வழங்கும் வகையில் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர உதவி எண் 181

பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணைப் பயன்படுத்தவும் மத்திய அரசு வகை செய்துள்ளது.

இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், "நாடு முழுவதும் பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இது தொடர்பாக, 181 என்ற மூன்று இலக்க எண்ணை அனைத்து மாநிலங்களிலும், பெண்களுக்கான அவசர உதவி எண்ணாகச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு கபில் சிபல் கடிதம் மூலம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்க வேண்டும். தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பெண்களுக்கான அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு, எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது.

Friday, January 18, 2013

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணத்தில் வேலை வாய்ப்பு

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது

இது குறித்து முழு விபரம் அறிய http://chennaimetrorail.gov.in/jobposting.php 

http://chennaimetrorail.gov.in/Advt-01-2013.pdf

Thursday, January 17, 2013

'குட் நியூஸ்'.. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 12 ஆக உயர்கிறது!

டெல்லி: வீட்டு உபயோகத்திற்காக வழங்கும் மானியவிலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் 50 ரூபாய் உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து மானியம் அல்லாத விலையில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருவதால் மானியவிலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மந்திரி சபையின் இறுதி முடிவுக்காக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தற்போது மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு ரூ.130 உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை மாதந் தோறும் ரூ.50 என்ற அளவில் உயர்த்தலாமா என ஆலோசிக்கப்படுகிறது.
டீசல் விலை உயரும்:
அதேபோல் டீசல் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.4.50 என உயர்த்தாமல் 4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை மாதம் 60 பைசாவிலிருந்து ரூ.1.50 வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

For more details about mayakulamnews

Wednesday, January 16, 2013

முஹம்மது சதக் பாலிடெக்னிக் க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை வாய்ப்பு முகாம்!

முஹ‌ம்ம‌து ச‌தக் பாலிடெனிக் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் ....
முஹ‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரியில் வெளிநாட்டு நிறுவ‌ன‌மான‌ அவ‌லான் டென்க்னால‌ஜியில் ப‌ணி புரிய‌ வேலை வாய்ப்பு முகாம் 20 1 2013 அன்று ஞாயிற்று கிழ‌மை காலை 9 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெறுகிற‌து.


இத்தேர்வில் டிப்ள‌மா மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் ம‌ற்றும் தொட‌ர்பிய‌ல் துறை ம‌ற்றும் எலக்ட்ராணிக்ஸ் இன்சுமென்ரேச‌ன் ப‌டித்து 2010/2011/2012 தேர்ச்சியடைந்த‌வ‌ர்க‌ள்/தேர்ச்சிய‌டையாத‌வ‌ர்க‌ள்,ஐடிஐ ம‌ற்றும் டிகிரி பிஏ பி.எஸ்.சி முடித்த‌வர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன‌டையலாம்.தேர்வுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3, க‌ல்வி சான்றித‌ழ் ம‌ற்றும் வ‌ய‌து சான்றித‌ழ் ந‌க‌ல்க‌ளுட‌ன் வ‌ர‌ கேட்டு கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இம்முகாமிற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி சார்பில் முத‌ல்வ‌ர் பேராசிரிய‌ர் அலாவுதீன் ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் சேக் தாவுது உள்ளிடோர் செய்துள்ள‌ன‌ர்.
google-site-verification: googlee59dddba6405f270.html