Tuesday, January 22, 2013

மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமைக் கலாம் இயக்கம், கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகளை  நடும் பணியை திங்கள்கிழமை துவக்கின.


  இதையொட்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. முகாம் அலுவலகம் அருகே பசுமைக் கலாம் இயக்கத்தின் நிறுவனரும், நடிகருமான விவேக் ஒரு மரக்கன்றினை நட்டார். அதற்கு கலாம் என்று பெயரிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:

  பசுமைக் கலாம் இயக்கம் சார்பில் இதுவரை 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 25 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பூர்த்தியடையும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை அழைத்து ஒரு மிகப்பெரிய விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம்.

  ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாகக் காட்சியளிக்கின்றன. மழை பெய்வதற்கு மிகவும் முக்கியம் மரங்களாகும். அதனால்  அப்துல் கலாமின் கனவான மரக்கன்றுகள் நடும் பணியை பசுமைக் கலாம் இயக்கம்  மூலம் செய்து வருகிறோம்.

  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் எழுச்சி தீபமாக இருந்து வரும் அப்துல்கலாமின் பெயரையை இன்று நட்டு வைத்த மரக்கன்றுக்கு சூட்டியுள்ளோம் என்றார்.

  இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசுகையில், இன்று ஒரே நாளில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மொத்தம் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம்.

 மேலும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும்  நடுவது உள்பட மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும்  நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

  விழாவில் டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமீது அப்துல்காதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகாம சுந்தரி, வட்டாட்சியர் க.அன்புநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜேக்கப் ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

  பின்னர் அப்துல் கலாம் படித்த சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மரக்கன்றுகளை விவேக் நட்டார்.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html